டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பேரணி நடத்தியபோது, கோபால் என்னும் நபரால் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணி செல்வதாக அறிவித்திருந்த நிலையில் கோபால் என்பவர் கையில் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் முதலாமாண்டு தகவல் தொடர்புத்துறை மாணவரான ஷதாப் நஜார் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய கோபாலைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள காணொளியில் ”ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்” , “இதோ உங்களின் சுதந்திரம்” எனவும், டெல்லி போலீஸுக்கு ஆதரவாகவும் அந்த நபர் கோஷங்கள் எழுப்புவதைப் பார்க்க முடிகிறது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி லதீதா ஃபர்சானாவைத் தொடர்புகொண்டபோது, காயமடைந்த மாணவர் நஜார், ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களால் மாணவர்கள் தங்களின் உறுதியில் இருந்து பின்வாங்கிவிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.