திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்றனர்.

தற்போது பஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

அந்த வகையில் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை, புதிய மேயராக சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.ஆர்யா ராஜேந்திரன், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளார். 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, எஸ்.எப்.ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர் மற்றும் தலைவராகவும் இருந்துள்ளார்.

மேலும், சி.பி.எம் கேசவதேவ் சாலை கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே தேர்தலில் வென்று மேயராக பொறுப்பேற்க உள்ள ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே