10 திருக்குறள்களை ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கி வருகிறார் கரூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர்.

ஓ, திருக்குறளா, பப்ளிக் எக்ஸாம்ல ரெண்டு மார்க் தருவாங்கலே அது தான என்று தான் இன்றைய காலத்து இளைஞர்கள் பலருக்கு திருக்குறள் பற்றி தெரியும்.

நிலைமை இப்படியிருக்கையில், தமிழ் மொழியையும் திருக்குறளையும், இன்றைய காலத்து இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க ஒரு நூதன முயற்சியை கையாண்டு வருகிறார் கரூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர்.

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் செங்குட்டுவன்.

சிறு வயது முதலே இவருக்கு தமிழ் மொழி மீதும், திருக்குறள் மீதும் தீரா காதல் இருந்து வந்துள்ளது.

இதனால் தான் நடத்தி வரும், கல்லூரி, விடுதி, உணவகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு வான் புகழ் கொண்ட வள்ளுவரின் பெயரையே வைத்துள்ளார்.

பெயரிட்டதோடு நிறுத்திவிடாமல், கல்லூரியின் உச்சியிலும், திருமண மண்டபத்தின் முகப்புகளிலும் திருவள்ளுவரின் சிலைகளை வைத்து அழகு பார்த்து வருகிறார் செங்குட்டுவன்.

தற்போது, தான்நடத்தி வரும் பெட்ரோல் பங்கில் 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தனது பெற்றோருடன் வந்து 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கி அசத்தி வருகிறார்.

கடந்த ஜனவரிமாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று இந்த சலுகை துவங்கப்பட்டுள்ளது.

நாகம்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது பெற்றோருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து திருக்குறளை ஒப்புவித்து அரை மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு செல்கின்றனர்.

தற்போது வரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த சலுகையை பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பெட்ரோல் பங்கின்உரிமையாளர் செங்குட்டுவன், எங்களது இந்த முயற்சி விளம்பரத்திற்காகவோ, வியாபாரத்திற்காகவோ அல்ல. மாணவ, மாணவிகள் சிறுவயதில் இருந்தே திருக்குறள் கற்று, அதன் மேண்மையை உணர்ந்து, நல் வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே எனவும், வரும் ஏப்ரல் மாதம் வரை இந்த சலுகை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சதமடிக்க காத்திருக்கும் நிலையிலும், தமிழ் மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் செங்குட்டுவன் போன்றோரின் முயற்சி பாரட்டுதலுக்குரியதே.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே