முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 18 வயதுக்கு குறைவான பருவமடைந்த பெண் தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் சட்டம் இடமளிக்கிறது என பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பஞ்சாபை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் 17 வயதான பெண் தம்பதியினர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதன் விபரம் :

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த மாதம் 21ல் திருமணம் செய்து கொண்டோம்.

இருவீட்டாருக்கும் இத்திருமணத்தில் சம்மதம் இல்லை. எனவே எங்களை சேர்ந்து வாழவிடாமல் அச்சுறுத்துகின்றனர்.

முஸ்லிம் தனிச்சட்டத்தை பொறுத்தவரை ஒரு பெண் பருவமடைவதும் 18 வயதை அடைந்து சட்டப்படி மேஜராவதும் ஒன்றாக கருதப்படுகின்றன.

எனவே பருவமடைந்த பெண் தான் விரும்பிய நபரை சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் தனிச்சட்டம் இடமளிக்கிறது.

எனவே எங்கள் திருமணத்தை எதிர்க்கும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்து நாங்கள் சுதந்திரமாக வாழ இந்த நீதிமன்றம் உதவ வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘நல்ல மனநலத்துடன் இருக்கும் 18 வயதுக்கு குறைவான பருவமடைந்த பெண் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் தனிச்சட்டம் இடமளிக்கிறது. 

எனவே இந்த முஸ்லிம் தம்பதியினருக்கான அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே