ஸ்டாலின் நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவர்: அமைச்சர் செல்லூர் ராஜூ சாடல்

குற்றங்களைக் கண்டுபிடித்துப் பெயரெடுக்க நினைக்கும் ஸ்டாலின் நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருவோரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறி நுழைந்து விடுவோர் அவர்களே மனமுவந்து வந்து பரிசோதனை செய்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நல்லது. சொல்லாமல் இருந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சிறப்பாகச் செயல்படுகின்றன. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

ஸ்டாலின் குற்றம் கண்டுபிடிப்பதில் நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவர். குற்றம் கண்டுபிடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்குவது அந்தக் காலம். தற்போது நல்லது செய்தால் மட்டும்தான் மக்களிடம் பெயரெடுக்க முடியும். இந்த அரசு எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், இவருக்கு மட்டும் தெரியவில்லை. ஸ்டாலின் கரோனாவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார். வேறு காரணம் எதுவும் இல்லை.

தமிழ் மொழியில் ஊர்களைப் பெயர் மாற்றம் செய்வதாக அரசு எந்த அரசு ஆணையும் போடவில்லை. துறை ரீதியாக ஆய்வு செய்தார்கள். பெயர்களை மாற்றலாம் என்று அறிவித்தார்கள். தமிழ் ஆர்வலர்கள், சரியாக இருக்காது என்றார்கள். உடனே முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசித் தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்துள்ளார்.

டிஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்புகள் இந்தி மொழியில் எழுதப்பட்டன. திமுக இந்தியை எதிர்த்துப் போராடிய கட்சி என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆட்சியில் அவர்களால் சாலைகளில் எழுதப்பட்ட இந்தியை எதிர்த்து நாங்கள் போராடினோம். அப்போது அவர்கள் வடமாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களுக்குத் தெரியாது என்றார்கள்.

அவர்கள் நடத்துகிற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலமும், இந்தியும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதை அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா?”

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே