டிக்டாக் உட்பட சைனாவின் செயலிகளுக்கு மத்திய அரசு தடையா ? உண்மை நிலவரம் என்ன ?

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மோதல் சூழல் நிலவியது. கடந்த திங்கள் அன்று இரு தரப்பு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால், சீனா இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்களையும் சீனா விடுவித்துளது. இதற்கிடையே, சீன தயாரிப்பு பொருட்கள் மற்றும் சீன தயாரிப்பு செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

நாட்டின் பல இடங்களிலும் சீன தயாரிப்பு செல்போன்களை உடைத்தும் போராட்டங்கள் நடந்தன. மேலும், ஸ்மார்ட் போனில் உள்ள சீன செயலிகளை அன் இன்ஸ்டால் செய்தும் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டிக்டாக் உள்ளிட்ட பல சீன தயாரிப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்ட ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவலியல் மையம் சுற்றறிக்கை அனுப்பியதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை பலரும் நம்பி, சீன செயலிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், மத்திய பத்திரிகை தகவல் மையம் அளித்துள்ள விளக்கத்தில், மேற்கண்ட கூற்றுடன் பகிரப்படும் அறிக்கை போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படி எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே