VIVO நிறுவனத்தின் IPL ஸ்பான்ஸர் ஒப்பந்தம் ரத்தாகிறதா?

ஐபிஎல் தொடரில் சீன நிறுவனமான Vivo-ன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மறு பரீசிலனை செய்வதற்காக நிர்வாக குழுவின் கூட்டம் அடுத்த வாரத்தில் கூட்டப்படுமென ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கம் வலுத்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் சீனாவைச் சேர்ந்த Vivo நிறுவனத்தின் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்க ஐபிஎல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
சீனாவின் Vivo நிறுவனத்திடம் இருந்து பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.440 கோடி ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைப்பதாகவும் இந்த ஒப்பந்தம் வரும் 2022 வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிசிசிஐயின் முந்தைய கருத்து:

இது தொடர்பாக நேற்று முன்தினம் பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் செய்தியாளர்களை சந்தித்த போது, ’நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, பகுத்தறிவை விட்டு விடுகிறீர்கள். சீன நாட்டுக்காக ஒரு சீன நிறுவனத்தை ஆதரிப்பதற்கும், இந்திய நலனுக்காக சீன நிறுவனத்திடம் உதவி பெறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும்போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டாலும், அதில் ஒரு பகுதியை பிசிசிஐக்கு விளம்பர கட்டணமாக செலுத்துகிறார்கள். அந்த பணத்துக்கு 42% வரியை மத்திய அரசுக்கு பிசிசிஐ செலுத்துகிறது. இதனால் இந்தியாவுக்குத்தான் பலன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன தயாரிப்புகளை நம்பியிருப்பதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் ஆனால் சீன நிறுவனங்கள் ஐபிஎல் போன்ற இந்திய அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சீன நிறுவனங்களை ஐபிஎல் புறக்கணித்தால் மீண்டும் அவர்கள் நாட்டிற்கே அந்தப் பணம் போகும் என்றும், நாம் தக்கவைத்துக் கொண்டால் அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக அணுகாமல் பகுத்தறிவுடன் ஆராய வேண்டும் என்றும் அருண் துமல் கூறியிருந்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 406 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே