கிரானைட் அதிபர் மற்றும் ஒட்டல் ஊழியர்களிடம் ரூ.26 கோடி மோசடி

மதுரையில் ஹோட்டல் ஊழியர்கள் 120 பேர் மற்றும் கிரானைட் அதிபரிடம் 26 கோடி ரூபாய் வரை மோசடி செய்த மதுரை ரமணா மெஸ் உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரிசர்வ்லைன், காந்தி மியூசியம் பூங்கா முருகன் கோவில், ஆரப்பாளையம், மூன்று மாவடி ஆகிய பகுதியில் ரமணா மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவர் தனக்கு அதிகமாக கடன் இருப்பதாகவும், அதனை அடைக்க உதவி செய்யுமாறும், அவ்வாறு செய்து தன்னுடன் பங்குதாரராக ஆகவும் கூறி மதுரை கே.கே.நகரை சேர்ந்த கிரானைட் அதிபர் கோபாலகிருஷ்ணனை அனுகியுள்ளார்.

அவரும் செந்தில்குமாரின் ஆசை வார்த்தையை நம்பி பங்குதாரராக ஆக விரும்பியதன் பேரில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்கவும், தொழில் வளர்ச்சிக்கு 50 லட்சம் ரூபாய் என 5 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

பின்னர் விசாரித்ததில் கடைகள், ஓட்டல்கள் உள்ளளிட்டவை நஷ்டத்தில் இயங்குவது தெரிய வந்தது.

மேலும் தனது ஹோட்டலில் பணிபுரியும் 120 ஊழியர்களின் பேரில் அவர்களுக்கே தெரியாமல் இந்தியன் வங்கியில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களின் பெயரில் பெற்ற கடன் தொகை 3 மாதம் கட்டவில்லை என ரமணா மெஸ்ஸில் பணிபுரியும் 120 ஊழியர்களுக்கும் வங்கி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் தனது பணத்தை மீட்டு தர கோரியும் புகார் அளித்துள்ளார்.

இதனை பெற்று கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே