ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் – ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் நீதிமன்ற காவல் அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்தது.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து சிதம்பரம் விளக்க மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர், எம்பியாக இருப்பதாகவும், பொறுப்புமிக்க குடிமகன் என்றும், ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே