ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 2018ல் சியட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அந்நிறுவனத்தின் டயர் உற்பத்தி நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியிலும், டயர் உற்பத்தியிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
திறன்மிக்க மனிதவளம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் என டயர் உற்பத்திக்கு தேவையான அனைத்தும் தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சியட் நிறுவன தொழிற்சாலைகளுக்கு ஒற்றை சாளர முறையில் தமிழக அரசு அனுமதி வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.
இத்தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளித்தார்.
சியட் நிறுவனம் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கப்பட்டதை போல், ஆராய்ச்சி நிறுவனத்தையும் தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.