அரசியலில் இருந்து சசிகலா விலகல் – டிடிவி தினகரன் விளக்கம்..!!

அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணத்தை டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியேவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறியிருந்தார். எனினும் சென்னை வந்த அவர் நீண்டகாலமாகவே அமைதியாக இருந்தார்.

இது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுவந்த நிலையில், திடீரென தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.

ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டது எனக்கு சோகமாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலே அப்படி கூறியிருக்கிறார்கள்.

தான் ஒதுங்கி இருந்தால்தான் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

தான் ஒரு பேசுபொருளாக இருக்க சசிகலா விரும்பவில்லை என்பதால் ஒதுங்க முடிவு செய்துள்ளார் என கூறினார்.

மேலும், அரசியலைவிட்டு ஒதுங்கினால் உடனே பின்னடைவு என்றெல்லாம் கூறமுடியாது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என்ற கருத்தை சசிகலா கூறியுள்ளார்.

அதேநேரம் எனது சித்தி என்பதற்காக சசிகலாமீது என் கருத்தை திணிக்கமுடியாது. அவரின் மனசாட்சியாக நான் பேசமாட்டேன் என்றார்.

மேலும் சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா போராடிக்கொண்டு தான் இருக்கிறார் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே