ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தனியார் சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஹாங்காங்கில் இருந்து, 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், கொரோனா பீதியால், ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகம் அருகே, நிறுத்தப்பட்டது.

அதில், 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கியுள்ளனர்.

கொரோனா பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்றும் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் மேலும், பலருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதில், 2 இந்தியர்களுக்கும் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கப்பலில் பரிசோதிக்கப்பட்டவர்களில் 174 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கப்பலில் உள்ளவர்கள் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2 இந்தியர்களுக்கு பாதிப்பு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே