அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி

கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்துகொண்டு நோய் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 100 கோடியில் யோகா மையம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

ஆந்திரம், கர்நாடகம், தில்லி ஆகிய மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவீதம் மிகவும் குறைந்து இருக்கிறது. 

இதற்கு முன்பு தினசரி 118, 115 என இறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது.

ஏற்கெனவே உடலில் பாதிப்புகள் இருந்தவர்களால் தான் இறப்பு அதிகமாக இருக்கிறது.

கரோனா நோய்தொற்று காரணமாக தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டதால் கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது.

ஆனால் ஆதாயம் தேடுவதற்காக வேண்டாத எதிர்க்கட்சிகள் தமிழக அரசை குறை கூறி வருகின்றன.

சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர், ஊராட்சி பணியாளர்கள் என அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு குடும்பத்தையும், உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சிறிதும் ஏற்கக் கூடியது அல்ல.

கரோனா காலத்திலும் வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு.

மற்ற மாவட்டங்களில் வேளாண்மை துறை இருக்கும் அல்லது தொழில்துறை சிறந்திருக்கும். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டும் இணைந்த சிறந்த மாவட்டமாக இருக்கிறது.

கரோனா காலத்திலும் 100% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களை இயங்க அம்மா அரசு அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கு மேலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

குடிமராமத்து பணிகளை முதன் முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கினேன். காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை இது ஒரு ராசியான மாவட்டம்.

முதலில் குடிமராமத்துப் பணியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கியதால் தமிழ்நாடு முழுவதும் நன்றாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொண்டு இரண்டு கட்டப்பட்டுவிட்டது, ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

மீதி தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.285 கோடிக்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் வட்டம் உதயம் பாக்கம் பகுதியில் ரூபாய் 300 கோடியில் கதவணை தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மதுராந்தகம் ஏரி 125 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தப்படும்.

60 கோடியில் புனரமைக்கப்படும் பல்லாவரம் குரோம்பேட்டையில் வெள்ளத் தடுப்பு பணிகள் ரூபாய் 41 கோடி அளவில் மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரத்தில் ரூ.2085 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே