யுவராஜ் சிங் இன்னமும் கூட பவர் ஹிட்டிங்கில் தாதாவாக திகழ்கிறார்: லெஜண்ட் ஆட்ட நாயகன் யூசுப் பதான் நெகிழ்ச்சி

ஆட்டம் முடிந்தவுடன் சாம்பியன் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “அபாரமான வெற்றி. நம்ப முடியவில்லை. கோப்பையை வெல்லத்தான் இங்கு வந்தோம்.

கோப்பையை வெல்லத்தான் இங்கு வந்தோம் என்று இந்தியா லெஜண்ட் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற ரோடு சேஃப்டி டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை இந்திய லெஜண்ட்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய லெஜன்ஸ்ட் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை லெஜண்ட்ஸ் 167/7என்று முடிந்தது. இதன் மூலம் இந்திய லெஜண்ட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய லெஜண்ட்ஸ் அணியில் யுவராஜ் சிங் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 60 ரன்களை விளாச, யூசுப் பத்தான் 36 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 62 நாட் அவுட்.

182 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கையின் அதிரடி லெஜண்ட்களான தில்ஷன், சனத் ஜெயசூரியா இறங்கினர். இருவரும் 7.2 ஓவர்களில் 62 ரன்கள் விளாசினர், அப்போது தில்ஷன் 21 ரன்களில் யூசுப் பத்தானிடம் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் ஆனார். 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த ஜெயசூர்யாவை யூசுப் பத்தான் எல்.பி. ஆக்க இலங்கை அணி 11 ஓவர்களில் 83/3 என்று ஆனது.

இடையே சமர சில்வாவை இர்பான் பத்தான் காலி செய்தார். உபுல்தரங்காவையும் இர்பான் வீழ்த்த 91/4 என்று இலங்கை தடுமாறியது. அப்போது சிந்தகா ஜெயசிங்கே (40), கவுஷல்யா வீரரத்னே இறங்கி சிலபல அதிரடிகளைக் காட்டினர். 18.4 ஓவர்களில் ஸ்கோர் 155 ரன்களை எட்டியது. அப்போது வீரரத்னே கோனி பந்தில் வெளியேற ஜெயசிங்கே ரன் அவுட் ஆக மஹரூப் டக் அவுட் ஆக இலங்கை அணி 167/7 என்று தோல்வியடைந்தது. இந்திய அணியில் இர்பான் பத்தான், யூசுப் பத்தான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் சாம்பியன் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “அபாரமான வெற்றி. நம்ப முடியவில்லை. கோப்பையை வெல்லத்தான் இங்கு வந்தோம்.

ஒட்டுமொத்த அணியின் முயற்சி இல்லாமல் இது சாத்தியமில்லை. கடைசி 2 ஓவர்களில் உதவிப்பணியாளர்களை அழைக்க நேரிட்டது. இது முக்கியமான தொடர், இந்த 6 அணிகள் மூலம் உலகிற்கு சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புண்ர்வை ஏற்படுத்தியிருப்பதாக நம்புகிறேன்.

இலங்கைக்கு எனது நன்றிகள், இங்கு வந்து ஆட ஒப்புக் கொண்ட அனைத்து அணிகளுக்கும் நன்றி. இவர்களுக்காக எனது கரகோஷம். சாலைப் பாதுகாப்பு இதைத்தான் உலகம் நெடுக நாங்கள் கொண்டு செல்ல போகிறோம். உண்மையில் மன நிறைவாக உள்ளது” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

ஆட்ட நாயகன் யூசுப் பத்தான் கூறும்போது, “விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது, நான் ஓய்வு பெற்ற பிறகு ஆடும் முதல் தொடர். வென்றதில் மகிழ்ச்சி, கடந்த 3 போட்டிகளாகவே நாங்கள் சிறப்பாக ஆடிவருகிறோம். யுவராஜ் இன்னும் பவர் ஹிட்டிங்கில் தாதாவாக இருக்கிறார். என் சகோதரனுடன் ஆடியதிலும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தத் தொடரை ஒவ்வொரு கணமும் மகிழ்வுடன் ஆடினோம்.” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே