கொரோனா முதல் அலை முடிந்ததா? இரண்டாவது அலை வருமா வராதா? இது 2வது அலையா? 3வதுஅலையா? அனைத்து கேள்விகளுக்கான விடை இதோ..!

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வெளியே வரலாம் . மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகலாம். எனவே விரைந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்

முதல் அலை முடிந்ததா?? முடியவில்லையா??? இரண்டாவது அலை வருமா வராதா?! இது 2வது அலையா??? 3வதுஅலையா??? என்று பல கேள்விகள்

வந்தேவிட்டது கொரோனாவின் அடுத்த அலை.

80 நாட்களில் இல்லாத அளவிற்கு திடீரென உயரும் தொற்று எண்ணிக்கையும், பாசிட்டிவிடி ரேட் உயர்வதும் மருத்துவமனைகள் எல்லாம் மீண்டும் நிரம்பி வழிவதும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இடமில்லாமல் காத்திருப்போர் பட்டியலில் நோயாளிகள் இருப்பதும் இந்த மாத துவக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டது.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் முதல் அலை ஜனவரி மாதம் 2020 வந்தபோது இந்தியாவின் மார்ச் மாதத்தில் அலை அடிக்க தொடங்கியது. மிகவும் அதிகமாக தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் டெல்லி பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டது. அதுபோலவே இப்பொழுது டிசம்பரில் ஐரோப்பிய நாடுகளில் துவங்கிய இரண்டாவது அலை மூன்று மாதங்களில் இங்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது அலைக்கான காரணம் என்ன???

கொரோனா வைரஸ்

ப்ளூ எனப்படும் சளி காய்ச்சல் உண்டாக்கக்கூடிய வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான் இந்த சார்ஸ் கோவிட் 2 எனப்படும் கொரோனா வைரஸ். நாணல் எப்படி வளைந்து நீரின் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்குமோ! அது போல எந்த தட்பவெப்ப நிலையிலும் தாக்குப்பிடித்து எல்லா நாடுகளிலும் சரிசமமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த கொரானா வைரஸை ஒரு வல்லமை படைத்த எதிரியாகத் தான் நோக்கவேண்டி உள்ளது.எல்லா வயதினரையும் சமமாக இந்த நோய் தொற்றுகிறது. பாதிப்பு மட்டுமே வயதானவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் அதிகமாக தெரிகிறது. தொற்றுக்குள்ளான அனைவருமே நோயை பரப்புகின்றனர் என்பது இந்த வைரஸின் மிகப்பெரிய பலமாக பார்க்கிறோம்.

இந்த வைரஸின் எளிதாக பரவக்கூடிய தன்மை

” காற்றடிக்கும் பொழுது நெருப்பு பரவுவதுபோல பரவும்” என்று கூறுவார்கள்.காற்றில் பரவக்கூடிய எந்த கிருமியையும் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதை கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் முழுமுடக்கத்தை தவிர நமக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது. மீண்டும் நாம் நகர ஆரம்பிக்கும் போது வைரஸ் பரவ ஆரம்பிக்கிறது.

பரவல் அதிகமாகும் பொழுது வல்லமையும் அதிகமாகி பல்வேறு உருமாற்றங்களை உண்டாக்கி கொள்கிறது. புதுவேகமெடத்து அதிகமான மக்களை தாக்குகிறது. இதுபோன்று பல்வேறு உருமாற்றங்கள் உலகம் முழுவதும் 25 ஆயிரம் வரை உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் மிகவும் வலிமைமிக்க ஒரு சில மாற்றங்களை பிரேசில், பிரிட்டன், சவுத் ஆப்பிரிக்கா நாம் செய்தித்தாள் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

நீண்ட நாள் தாக்குப் பிடிக்காத எதிர்ப்பு சக்தி

ஒரு நோய் நம்மை தாக்கினால் நமக்கு உண்டாகக்கூடிய எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும் .அம்மை போன்ற நோய்கள் ஒரு முறை தாக்கினால் தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நமக்கு எதிர்பாற்றல் கிடைக்கும். ஆனால் கொரோனாவைப் பொருத்தவரை ஒருமுறை நோயால் உண்டான எதிர்ப்பு சக்தி 3லிருந்து அதிகபட்சமாக 11 மாதம் வரை மட்டுமே நீடிக்கிறது. இது மீண்டும் நோய்த்தொற்று வருவதற்கும் அவர் மூலம் நோய் பரவுவதற்கும் வாய்ப்பாகிறது.

வைரஸ் எதிர்ப்பு மருந்து

இன்றுவரை இது தான் மருந்து , 100% கொரோனாவை அழிக்கும் என்று சொல்ல முடியாத நிலைமை. இதுவரை உள்ள மருந்துகளும் சிகிச்சை முறைகளும் பரிசோதனை முறையிலேயே செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நகரத்தில் நன்றாக வேலை செய்யும் மருந்து இன்னொரு இடத்தில் அந்த அளவுக்கு பயனளிப்பதில்லை.

தடுப்பூசி

தடுப்பூசிகள் இப்போதுதான் பிறந்து தவழ ஆரம்பித்திருக்கின்றன. கொரோனாவை எதிர்த்து நிற்குமளவுக்கு அதிகமான நபர்களுக்கு கொடுக்கப்படும் போதுதான் தடுப்பூசியினால் இந்த வைரஸை ஒழிக்க முடியும்.

கைவிட்ட கொரோனா நெறிமுறைகள்

முடிந்துவிட்டது கொரோனா என்று நாம் முக கவசம் அணிய மறந்தது. வெப்பநிலை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து முக கவசம் அணிவது சிரமமான விஷயமாக இருப்பது. இன்னொரு அலை வராது என்று அலையலையாக நாம் திரண்ட கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள், முக்கியமாக தேர்தல் பரப்புரைகள் மீண்டும் பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து, முழு இருக்கை வசதியுடன் திரையரங்குகள் , வணிக வளாகங்கள்.

அடர்த்தியாக மக்கள் வாழும் இடம்

ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 60,000 பேர் வரை சென்னையில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. அத்துடன் பொருளீட்ட கூட்டமான இடங்களுக்கு சென்று வர வேண்டிய அத்தியாவசியம், அதிகமான மக்கள் தொகையால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியப்படாமல் இருப்பது.

எப்படி சமாளிக்கலாம்..?

தடுப்பூசி சுவரை உருவாக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வெளியே வரலாம் . மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகலாம். எனவே விரைந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
சென்னையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு 60 ஆயிரம் வரை தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய அளவுக்கு நமக்கு வசதிகள் இருந்தாலும் அதை பாதி அளவே மக்கள் முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்கள்.

*முக கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, முடிந்தவரை வெளியே செல்லக்கூடிய சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நல்லது.

*லேசான சளி காய்ச்சல் என்றால் வீட்டிலேயே நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்வதும் தைரியமாக முன்வந்து கொரோணா பரிசோதனை எடுத்துக் கொள்வதும் உசிதம்.

*கொரோனா அலை வருவதை தடுக்க முடியாது. ஆனால் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரசுடன் ஒத்துழைத்தால் ,அந்த அலையில் அடித்துச் செல்லப்படாமல் கட்டாயமாக நம்மால் காத்துக்கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே