புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் படுகொலை – பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகர் காலணி பகுதியைச் சார்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவரின் மகன் 24 வயதுள்ள கார்த்தி.

இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டுக்காக கேக் வாங்க தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பெரியகுளம் மேல்மங்கலம் அம்பலகாரர் சாவடி அருகே வந்த போது அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பைக்கில் வந்தவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

இதனால் பைக்கில் வந்த வாலிபர்கள் பைக்கை விட்டு விட்டு ஓடியுள்ளார்கள்.

சிறிது நேரம் கழித்து கார்த்தி மட்டும் தனது பைக்கை எடுக்க வந்த போது கூடியிருந்தவர்கள் கார்த்தியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் பற்றி அறிந்த ஜெயமங்கலம் காவல்துறை, கார்த்தியின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்க்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த சம்பவத்தை தொடர்ந்து கார்த்தியின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி ஜெயமங்கலம் நான்கு ரோடு மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சாலை மறியல் செய்தனர்.

மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுத்தி சாலை மறியல் செய்த கார்த்தியின் உறவினர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனை நுழைவாயில் கேட்டை பூட்டியதால் மருத்துவமனைக்குள் மருத்துவர்களும், நோயாளிகளும் மருத்துவமனைபணியாளர்களும் உள்ளே செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானர்கள்.

புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த கொலை சம்பவத்தால் பெரிய குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே