தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழக அரசு!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசு, சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய குழுவையும் அமைத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கடந்த 2018 ஏப்ரல் 1 முதல் சொத்துவரியை உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன. வாடகை கட்டிடங்கள், வாடகை அல்லாத குடியிருப்பு கட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்துவரி 50 சதவீதத்திற்கு மிகாமல் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் சொத்துவரி மறுநிர்ணயம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சொத்துவரி உயர்வை குறைக்கக் கோரி பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்ததாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அறிவித்ததன்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கும் என்றும், அதுவரை நகர்ப்புற உள்ளாட்சிகளில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தி வந்த அதே சொத்து வரியை கட்டிட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.

ஏற்கெனவே கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி, வரும் அரையாண்டுகளுக்கான கணக்கில் ஈடுசெய்யப்படும் என அவர் விளக்கம் அளித்தார். இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே