மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21 சதவீதமாக அதிகரித்துள்ளது

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது ஜவடேகர் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்து அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு முன் 17 சதவீதம் இருந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்கிறது. 

இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள்.

இதனால் நடப்பு நிதியாண்டில் அரசுக்குக் கூடுதலாக ரூ.14 ஆயிரத்து 595 கோடி செலவாகும். இது ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 7-வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியது.

அதன்பின் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு உதவும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே