20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் – வைத்திலிங்கம் உறுதி..!!

ஒரத்தநாடு தொகுதியில் குறைந்தது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, அத்தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரத்தநாடு தொகுதிக்கு ஜெயலலிதா செய்திருக்கும் சாதனைகள் பல.

இன்னும் பத்தாண்டு காலத்தில் காண முடியாத வளர்ச்சியை ஜெயலலிதா காலத்தில் இந்த தொகுதி பெற்றுள்ளது. இது விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயிகளுக்கு பல சலுகைகளை முதல்வர் அறிவித்திருக்கிறார்.

விவசாய கடனை ரத்து செய்திருக்கிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இந்த ஆட்சி மீதும், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மீதும் இந்த தொகுதி மக்கள் நம்பிக்கை வைத்தவர்கள்.

நான் நான்கு முறை தேர்தலில் நின்றிருக்கிறேன். 3 முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஒருமுறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். இந்த முறை கட்டாயம் நான் குறைந்தது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

கடந்த காலத்தில் நான் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என சொல்பவர்கள் ஏதும் அறியாதவர்கள். அத்தனை திட்டங்களை நான் செய்திருக்கிறேன்.

சாதாரண மக்களுக்கே இது தெரியும். திமுக 5 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. அவர்களுடைய நிதியையும் சரியாக பயன்படுத்தவில்லை. திமுக மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவும்.

சுதந்திரமடைந்து இதுவரை மழைக்கால பாதிப்புகளுக்கு இப்படி பெரியளவில் நிவாரணம் வழங்கியதே கிடையாது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஹெக்டேர் தென்னந்தோப்புக்கு 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்பட்டது” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே