வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திமுக சார்பில் வழக்கு

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்ட தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தும், மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட கோரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே