கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கிய மக்களுக்கு தவணையை திருப்பி செலுத்துவதற்காக கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு 6 மாதங்கள் சலுகை வழங்கியது.

அதன்படி, தவணையை திருப்பி செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டியை, ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

இந்த சலுகையை தங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என ரியல் எஸ்டேட், மின்சாரம் மற்றும் சிறுகுறு உற்பத்தியாளர்கள் கேட்டதால், வட்டி வட்டி வசூல் விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.

இதில் பதிலளித்த மத்திய அரசு, ‘‘6 மாத கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்ட சலுகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து அனைத்து துறைகளுக்கும் தளர்வு வழங்கினால், மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

இதனால், நாடு முழுவதும் வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும்’’ என கூறியிருந்தது.

இந்த வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், ‘கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை விதிக்கிறோம்.

கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியையும் முழுமையாக தள்ளுபடி செய்வது இயலாத நடவடிக்கை ஆகும்.

கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தால் திருப்பி தரப்பட வேண்டும்.

கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது.

வட்டி தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கொள்கையில் தலையிட முடியாது,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் துறை நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே