மூன்றாம் அலையை ஏற்படுத்துமா ஒமைக்ரான்..??

ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் அடுத்த அலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகெங்கும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இதை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதுவரை 59 நாடுகளில் இந்த ஓமிக்ரான் பாதிப்பு பரவியுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா

இந்த ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாகப் பரவுவதாக முதற்கட்ட ஆய்வுகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எங்கு கொரோனா 3ஆம் அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது அடுத்த அலை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

3ஆம் அலை?

இந்நிலையில் இது குறித்து தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான WHO இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் கூறுகையில், “புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலேயே விஷயங்கள் மோசமாகும் என்று அர்த்தமல்ல. இப்போது இருக்கும் சூழலில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. இன்னும் இந்த பெருந்தொற்று முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

என்ன நடவடிக்கை

உலகின் மற்ற பகுதிகளில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா இன்னும் கொரோனா ஆபத்து முடிந்துவிடவில்லை என்பதையே உணர்த்துகிறது. தெற்காசியப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும். பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல வேக்சின் பணிகளை அதிகரிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கூடுதல் தரவுகள் தேவை

அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டிருப்பது, வேகமாகப் பரவுவது ஆகியவை ஓமிக்ரான் கொரோனாவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது கொரோனா பொருந்தொற்றின் போக்கையே மாற்றும் ஆபத்து உள்ளது. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது சொல்வது சற்று கடினம் தான். இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நாடுகளிடம் இருந்தும் கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளோம். இதனை வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்,

டெல்டாவை விட ஆபத்து குறைவு

ஓமிர்கானின் பரவும் வேகம், தீவிர தன்மை, ஏற்கனவே குணமடைந்தவர்களை ஓமிக்ரான் மீண்டும் தாக்குமா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே குணமடைந்தவர்களை ஓமிக்ரான் தாக்க வாய்ப்புள்ளதாகவே தென் ஆப்ரிக்காவிலிருந்து கிடைத்துள்ள தரவுகள் நமக்குக் காட்டுகின்றன. ஆனால் இன்னும் பல தரவுகள் தேவை. அதேநேரம் டெல்டாவை விட ஓமிக்ரான் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இவற்றை உறுதிப்படுத்த நமக்குக் கூடுதல் தரவுகள் தேவை. தற்போதைய சூழலில் வைரஸ் பாதிப்புகள் எங்கு அதிகரிக்கிறதோ அந்த பகுதிகளைக் கண்டறிந்து வைரஸ் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொடக்கத்திலேயே நடவடிக்கை தேவை

அதேபோல சுகாதார உட்கட்டமைப்பையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகள் உள்ளதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். தொடக்கக் காலத்திலேயே நாம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், குறைவான கட்டுப்பாடுகள் உடன் நம்மால் இதைக் கட்டுப்படுத்த முடியும். அனைத்தையும் விட வேக்சின் பணிகளை நாம் வேகப்படுத்த வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே