சிறிய வங்கிகளின் திறன், அளவு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க செய்யவே, அவை, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி டெபாசிட் காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் பிரச்னைகளை கம்பளத்தின் கீழ் மறைக்கும் மனோபாவம் தான் இருந்தது.ஆனால், இன்று புதிய இந்தியாவில், பிரச்னைகளை தாமதப்படுத்தாமல், தீர்ப்பதற்கு கவனம் செலுத்தப்படுகிறது. நான் முதல்வராக இருந்த போது, வங்கி டெபாசிட் காப்பீட்டிற்கான ரூ. 1லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என அப்போதைய மத்திய அரசிடம் வலியுறுத்தினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அதனை செய்வதற்கு மக்கள் இங்கு அனுப்பி வைத்தனர்.உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலவரையறை கூடிய வைப்புத்தொகை காப்பீடு திட்டத்திற்கு டெபாசிட்தாரர்களே முக்கியமாக உள்ளனர். கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் டெபாசிட்தாரர்களுக்கு ரூ.1,300 கோடி வழங்கப்பட்டது.வங்கிகள், நிலைகுலையும் பட்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓரு காலத்தில் வங்கிகள் நெருக்கடியை சந்தித்த போது, தங்களின் பணத்தை திரும்ப பெற பணத்தை டெபாசிட் செய்த மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தனர். ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினர் இதற்காக பல ஆண்டுகள் காத்திருந்தனர்.இதனை மாற்றி , குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் திரும்ப கிடைக்க செய்ய, சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது.வங்கிகள், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் போது, டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்படும் பணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 98 சதவீதம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
டெபாசிட்தாரர்கள், பணத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்போது, வங்கிகள் வளர்ச்சி பெறும். வங்கிகளை பாதுகாக்க, டெபாசிட்தாரர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். நாங்கள், அவர்களுக்கு உத்தரவாதம் வழங்கி வங்கியை காப்பாற்றி உள்ளோம். சிறிய வங்கிகளின் திறன், அளவு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க செய்யவே, அவை, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.