கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் திங்கள்கிழமை (டிச.13) முதல் அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (டிச.13) முதல் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வருவோர், இரு தவணைகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா என்பது குறித்து கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் ஆய்வு செய்யப்படும் என்றும் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை சனிக்கிழமை செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே