திருமண மண்டபத்தில் பணப்பட்டுவாடா? – போடியில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முற்றுகை போராட்டம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்

தேனி மாவட்டம் போடியில் தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் மகனுடன் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலால் திமுக.வினர் ஒரு மணி நேரம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக.வினரும் அங்கு வந்ததால் இரு தரப்புக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவால் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

போடியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதற்காக போடி குயவர்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரைச் சந்தித்து ஆதரவு கேட்டுக் கொண்டிருந்தார். அவருடன் இளையமகன் ஜெயபிரதீப்பும் உடனிருந்தார்.

ஆனால், தேர்தல் விதிகளை மீறி கூட்டம் நடப்பதாகவும், பணப் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அப்பகுதியில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து திமுக. நகரச் செயலாளர் ம.வி.செல்வராஜ், இளைஞரணிச் செயலாளர் நடராஜன், தேர்தல் பொறுப்பாளர் பஷீர் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மண்டபம் முன் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதி ராக அவர்கள் முழக்கமிட்டனர். அதிமுக.வினரும் இப்பகுதிக்கு திரண்டு வந்ததால் இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறும் நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து போடிகாவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் திமுக.வினர் போராட்டத்தைக் கைவிடாததால் தொடர்ந்து அப்பகுதி பதற்றமாகவே இருந்தது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்ஜெயபிரதீப் ஆகியோர் திருமணமண்டபத்தை விட்டு வெளியேறினர். அப்போது திமுக.வினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முழக்கமிட்டபடியே பின் தொடர்ந்தனர். அவர்களை நெருங்க விடாமல் அதிமுக.வினரும் முழக்கமிட்டபடி பாதுகாப்பு வளையமாக நின்றனர்.

இருவரும் அங்கிருந்து சென்றதும் கட்சி நிர்வாகிகள் கலைந்துசென்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடந்த முற்றுகைப் போராட்டத்தால் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே