தாலிக்குத் தங்கம் கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் வருவாய் எடுப்பது ஏன்?- கமல் கேள்வி

தாலிக்குத் தங்கம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் மூலம் மக்களிடம் இருந்து வருவாயை ஏன் எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

”ஊருக்குள் பாதாளச் சாக்கடை என்பது, மங்கள்யான் போன்ற ராக்கெட் விடும் அறிவியல் இல்லை. தாலிக்குத் தங்கம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் மூலம் மக்களிடம் இருந்து வருவாயை ஏன் எடுக்க வேண்டும்? மனிதனுக்கு ஒரு வாய், ஒரு குடல்தான் இருக்கிறது. இன்றைக்கு 100 அடிக்கு ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அரசு ஏன் அதனை நடத்த வேண்டும். டாஸ்மாக் மூலம் ரூ.36,000 கோடி வருவாய் வருகிறது. நாங்கள், பாதிக் கடைகளை மூடிவிட்டு, இரட்டிப்பு வருமானம் தரும் திட்டத்தைத் தருவோம்.

விஷன் ராஜ்யம்; மிஷன் ராஜ்யம்; கமிஷன் ராஜ்யம் இல்லை. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்கிறார்கள். ஒருவர் அடிக்கல் நாட்டுபவர்; மற்றொருவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பவர்.

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என மநீம சொல்லியது. 50 ஆண்டுகளாகச் சொன்னது எதையும் செய்யாதவர்கள், இன்றைக்கு அதனையும் சொல்கிறார்கள். ஒரு ஊழல்வாதியை அகற்றிவிட்டு, இன்னொரு ஊழல்வாதியை நீங்கள் கொண்டுவரக்கூடாது. மக்களை இருட்டில் தள்ளிவிட்டு, அவர்கள் வெளிச்சத்தில் இருக்கிறார்கள். மாற்றத்தை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களுக்குத் தொழில் தொடர்ந்து நடக்க வேண்டும். ஊழலுக்கு மாற்று நேர்மைதான்.

சமூக நீதி என்னும் போர்வையில், அடியில் வேறு வேலைகள் நடக்கின்றன. சாதியை அகற்றினார்களா? இல்லை! சமூக நீதி என்பது மனிதனின் கடமை. அது தேவை. நிராகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் வரை, ஒதுக்கீடு வேண்டும். 40 ஆண்டுக் கோபத்தை இன்னும் 20 நாட்களில் வெளிப்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் காட்டிய விசுவாசம் அவர்களிடம் இல்லை.

அவர்கள் 7 தலைமுறைகளை யோசித்துச் சேர்த்து வைத்துவிட்டார்கள். நீங்கள் உங்கள் தலைமுறைகளைப் பற்றி யோசியுங்கள்”.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே