சசிகலா விடுதலை கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? – முதல்வர் பழனிசாமி பதில்..!!

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் வராது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

‘7.5% உள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால், மருத்துவப் படிப்பில் சேர 313 பேருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3,44,485 பேரில் 41% அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டில் 6 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது.

நான் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காகத்தான் 7.5% உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம்.

அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் குறித்துப் புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் சம்பந்தமாக குழு ஆராய்ந்து வருகிறது.

ஆய்வு செய்து முடிவு வந்த பின்னர்தான் அரசு முடிவெடுக்க முடியும்.

அரசாங்கம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பருவமழையை எதிர்கொள்வது குறித்துக் கண்காணித்து வருகிறார்கள்.

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவதால் எவ்வித மாற்றமும் வந்துவிடாது.

கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த மாற்றமும் ஏற்படாது.

10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு சம்பந்தமாக இப்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது. நீட் தேர்வு வருவதற்கு முன்னர் எத்தனை பேர் தேர்ச்சி பெற முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில் நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே