கரோனா தடுப்பூசி போட வீடுகளில் உள்ள முதியோரை அழைத்துவர வேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சென்னையில் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,277 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அடையார் மண்டலத்தில் 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமையும் பார்வையிட்டார். மருந்தீஸ்வரர் கோயில் பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் எதிரில் உள்ள காய்கறி அங்காடியில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் 2-வது அலை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே கரோனா வைரஸ் பரவாத இடங்களில் தற்போது பரவி வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தற்போது 350 வரை உயர்ந்துள்ளது. தற்போது மாநகராட்சியிடம் நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

தற்போது நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இது 60 ஆயிரமாக உயரும்போது, 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு எளிதில் எட்டப்படும். தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக மக்கள் கொண்டுசெல்ல வேண்டும். இந்த தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படாது.

இஸ்ரேலில் 60 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட்ட பிறகு, கரோனா தொற்று 90 சதவீதம் குறைந்துவிட்டது. இறப்பு அங்கு பூஜ்ஜியமாகிவிட்டது. சென்னையில் மக்கள் தொகை 80 லட்சமாக உள்ள நிலையில், 4 லட்சம் பேருக்கு (5 சதவீதம்) மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய 3 மாதங்கள் ஆகும். அதுவரை பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 158 தெருக்களில் 3 பேருக்கு மேல் தொற்று உள்ளது. 200 வார்டுகளில், தொற்று அதிகமுள்ள 20 வார்டுகள் அடையாளம் காணப்பட்டு கிருமிநாசினி தெளிப்பது, எச்சரிக்கை பேனர் வைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா தொற்றுதடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை. வதந்தி பரப்புவோர் மீது இணைய குற்ற தடுப்பு போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே