கட்டாக்கில் கோப்பையை வெல்லப்போவது யார்?

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்தில் வென்றால் தொடர்ச்சியாக 10வது ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்திய – மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. 

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

13 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றுவரும் இந்திய அணி சாதனையை தக்கவைத்துக்கொள்ள தயாராகியுள்ளது.

இதில் ஜெயம் கிடைத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா வெல்லும் 10-வது ஒருநாள் தொடராகும்.

தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மீண்டும் இந்தியா அதிரடிக்கு வந்துள்ளது. பந்துவீச்சில் இந்தியா இன்னும் மிரட்ட வேண்டும்.

புவனேஷ்வர் குமார் காயம், தீபக் சாஹரும் காயம் என பவுலிங்கில் சிரமம் உள்ளது.

வேகப்பந்து வீச்சில் இந்தியாவின் தடுமாற்றம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் இன்னும் சோபிக்க வேண்டும்.

தொடக்க வீரர் ஹோப் கையில் தான் வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் இருக்கிறது. ஹெட்மெயர், பூரன் ஆகியோரும் சிறப்பாக ஆட வேண்டும். பந்துவீச்சும் ஜொலிக்க வேண்டும்.

மைதானம் பேட்டிங்குக்கு சாதகமான ஒன்று. எனவே பேட்டிங்கில் ஜொலிக்கும் அணிக்கு தொடர் என்பதால் ரசிகர்கள் இந்திய அணியை அதிகம் எதிர்நோக்கி உள்ளனர்.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியும் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால், இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே