தற்போதைய முன்னணி நிலவரங்களை கணக்கிடுகையில் JMM – Congress – RJD கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டின் புதிய முதலமைச்சராவதற்கு அதிகபட்ச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

யார் இந்த ஹேமந்த் சோரன்?

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்திலுள்ள நெம்ரா எனும் கிராமத்தில், 10 ஆகஸ்ட் 1975ல் சிபுசோரன் – ரூபி தம்பதியருக்கு பிறந்தவர் ஹேமந்த் சோரன். இவருக்கு வயது 44.

பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் கல்லூரியில் சேர்ந்த ஹேமந்த் சோரன் அதனை நிறைவு செய்யவில்லை.

ஹேமந்த் சோரனின் தந்தை சிபுசோரன் ஜார்க்கண்டின் முதலமைச்சராகவும், மன்மோகன் சிங் அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

தனது அரசியல் வாழ்க்கையை 2005-ம் ஆண்டு தொடங்கிய ஹேமந்த் சோரன், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தும்கா தொகுதியில் போட்டியிட்டு சக கட்சியின் அதிருப்தி வேட்பாளரான ஸ்டீபன் மாரண்டியிடம் தோல்வியை தழுவினார்.

சிபுசோரனின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட அவரின் மூத்த மகன் துர்கா சோரன் 2009ல் எதிர்பாராதவிதமாக மரணமடைந்ததால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைமை பதவிக்கு ஹேமந்த் கொண்டுவரப்பட்டார்.

ஜூன் 24 2009 முதல் ஜனவரி 4 2010 வரை ராஜ்யசபா எம்.பியாக ஹேமந்த் பதவி வகித்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகளை உள்ளடக்கிய அர்ஜூன் முண்டா தலைமையிலான பாஜக அரசில் துணை முதல்வராக ஹேமந்த் செயலாற்றினார்.

பின்னர் 2013 முதல் 2014 வரை மாநிலத்தின் இளம் முதலமைச்சராக பதவி வகித்தார்.

இந்த ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், JVM-P மற்றும் RJD கட்சிகளை ஒருங்கிணைத்தார் ஹேமந்த்.

இதன் மூலம் நாடு தழுவிய மகாகூட்டணிக்கு ஜார்க்கண்ட் அஸ்திவாரம் போட்ட முதல் மாநிலமாக மாறியது.

மலைவாழ் மக்களின் நிலமெடுப்பு சட்டதிருத்தத்தை எதிர்த்தது, தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்கு ஆதரவு, மதுபானக் கடைகளை அரசு ஏற்றதற்கு எதிர்ப்பு, அரசு பள்ளிகளை இணைத்தது போன்ற பாஜக தலைமையிலான முதல்வர் ரகுபர் தாஸின் திட்டங்களை ஹேமந்த் சோரன் தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக எதிர்த்தார்.

JMM கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கடந்து விட்டதால், ஜார்க்கண்டின் முதலமைச்சராக 2-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே