என்ன மாதிரி வீரர் ரிஷப் பந்த்…. இவர் இல்லாத இந்திய அணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது: இயான் பெல் வியப்பு

அரிதான திறமைகளைக் கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இல்லாத இந்திய அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் பெல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ரிஷப்பந்தின் திறமை மெருகேறிவருகிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் அடித்த 97 ரன்கள், காபாவில் வெற்றிக்காக அடித்த 89 ரன்கள் என ரிஷப் பந்த் அனைவராலும் பாராட்டப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்து தேர்வாளர்களை வியக்க வைத்தார்.

இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4-வது வீரராக களமிறங்கிய ரிஷப் பந்த், இரு போட்டிகளில் இரு அரை சதங்களை விளாசினார். அதிலும் நேற்று நடந்த ஆட்டத்தில் 78 ரன்களை ரிஷப் பந்த் விளாசி ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக அமைந்தார். இதனால், அடுத்து வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ரிஷப்பந்த் இந்திய அணியிலும், விளையாடும் 11பேர் கொண்ட அணியிலும் தவிர்க்கமுடியாதவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இயான் பெல் கிரிக் இன்போ தளத்துக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சமீபத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். என்ன மாதிரியான வீரர் ரிஷப் பந்த். அரிதான திறமைகளைக் கொண்டிருக்கிறார். வரும் காலத்தில் ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. என்னைப் பொருத்தவரை இந்திய அணியின் எதிர்காலமாக இருக்கிறார், உலகளவில் சிறந்த வீரர்கள் ரிஷப்பந்தைச் சுற்றி உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த்திடம் பேட்டிங்கில் முதிர்ச்சி காணப்பட்டது. நன்றாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார், டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் அவருக்கு அதிகமான நம்பிக்கையளித்துள்ளது.

இதுபோன்ற முதிர்ச்சியை இளம் வீரர்களிடம் காண்பது அரிதானது. இதுமிகவும் அரிதான புத்திசாலித்தனம். ரிஷப்பந்தின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ரிஷப்பந்த் ஆட்டத்தைக் காண வியப்பாகவும், மகிழ்சியாகவும் இருந்தது. உண்மையான மேட்ச் வின்னர் ரிஷப்பந்த் தான்.

இங்கிலாந்து தொடர் ரிஷப் பந்த்துக்கு மிகச்சிறந்த தொடராக இருந்திருக்கும். டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் அனைத்திலும் ரிஷப்பந்த் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார், ஆனால், அமைதியாக இருக்கிறார்.

இவ்வாறு இயான் பெல் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே