பிங்க் ரீமேக் வக்கீல் சாப்பில் சண்டைக் காட்சிகள் ஏன்? – தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்

பிங்க்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கில் சாப்’ திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பேசியுள்ளார்.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதை போனி கபூர் தயாரித்தார்.

அடுத்ததாக, பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் தெலுங்கில் உருவாகியுள்ளது. தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. படம் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.

படத்தின் டீஸர் ஒரு பக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மூன்று பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டிய கதையில் நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும்படி சண்டைக் காட்சிகள் இடம்பெறுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது உண்மையில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தானா, அந்தப் படம் சொல்லவந்த செய்தியை இந்த ரீமேக் ஒழுங்காகச் சொல்லுமா என்று பல சினிமா ஆர்வலர்கள் கேள்வியெழுப்பினர்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் போனி கபூர், “பவன் கல்யாண் ரசிகர்களுக்குத் தேவையானதை தெலுங்கு ரீமேக்கில் கொடுத்தாக வேண்டும். அவருக்கு 3 வருடங்கள் கழித்து வெளியாகும் படம் இது. அசல் கதையின் ஆன்மாவைக் கெடுக்காமல் நாங்கள் வணிகரீதியான விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம்.

தமிழில் வித்யாபாலன் நடித்ததைப் போல தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இவர்கள் திரையில் பல வெற்றிகளைப் பார்த்த ஜோடி. தெலுங்குப் பதிப்பில் இரண்டு சண்டைக் காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்கென வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தின் கரு ‘பெண்கள் இல்லை என்று சொன்னால் இல்லைதான்’ என்பதைப் பற்றியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே