திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடப் போகும் அறிவிப்பு என்ன..??

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக திமுக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரும், முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடியாக குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார்.

முதல்வரின் அதிரடி அறிவிப்பால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்று காலம், புயல் பாதிப்பு காலங்களில் குடும்ப அட்டத்தாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேட்ட போது வழங்க மறுத்த முதல்வர் தனது சுயநலத்திற்காக, தேர்தல் ஆதாயத்துக்காக தற்போது பொங்கல் பரிசை ரூ.2500 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில்,

இதற்கு பதிலடியாக பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த பொங்கல் காலத்திலும், ரூ.1000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இப்போது கரோனா நோய் தொற்று மற்றும் புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

அதனால் நிதி உதவியை உயர்த்தி வழங்குகிறோம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது தவறா என்று எதிர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் ,திமுக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திமுக முகநூல் பக்கத்தில், டிசம்பர் 20 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். காத்திருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரின் அறிவிப்பு என்னவாகும் இருக்கும் என்று திமுகவினர், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினரையும் காத்திருக்க வைத்துள்ளது.

அதாவது கட்சி கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பா?, ஆட்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டா?, விவசாயிகள் போராட்டம் குறித்த அறிவிப்பா, தேர்தல் தொடர்பான முக்கிய அம்சமா இருக்குமான என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் தங்கள் விருப்பத்தை முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே