அமமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம்: தினகரன் நம்பிக்கை

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை கடம்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அப்போது ஆளும்கட்சியினர் வாக்குக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து பார்த்தனர். அங்கு மிகவும் ஏழை மக்கள் தான் உள்ளனர். அந்த மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க வேண்டுமென்றால், அது டி.டி.வி. தினகரனால் தான் முடியும் என எண்ணி, என்னை வெற்றிபெறச் செய்தனர். அங்கு, இரட்டை இலையை தோற்கடித்தனர். காரணம், இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். இன்று அவர்கள் யாரால் ஆட்சியில் உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அவர்கள் தோல்வியடைந்ததும், டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டார் என என்னைப் பார்த்து கூறினர். டோக்கன் வாங்கிக்கொண்டு அரசியல்வாதியை நம்பி யாராவது வாக்களிப்பார்களா? ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தேன்.

அந்த தேர்தலில் இது ஜெயலலிதாவின் ஆட்சி கிடையாது. அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வாக்களியுங்கள் என்றேன். 4 ஆண்டுகள் டெல்லியின் உதவியால்தான் பழனிசாமியின் ஆட்சி தப்பியது. மக்கள் ஆதரவால் அல்ல.

அதுபோல், தாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என திமுகவினர் சொல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அப்படியல்ல. அமமுக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புதான் நிறையவே உள்ளது. எங்கள் ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், மகளிரை தொழில்முனைவோராக உருவாக்குவோம். கோவில்பட்டியை தலைநகரமாக கொண்ட மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். சென்னை – குருவாயூர் விரைவு ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தினகரன் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே