குணதிலகா ‘அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட்’ அவுட்; ஷேய் ஹோப் பிரமாத சதம்: இலங்கையைப் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட் வகையில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்ட சர்ச்சையான முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட் வகையில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்ட சர்ச்சையான முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நார்த் சவுண்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 105 ரன்களுக்கு விக்கெட் இழக்காத நிலையிலிருந்து 232 ரன்களுக்கு சுருண்டது. தனுஷ்கா குணதிலகா 55 ரன்களில் பந்தின் மேல் காலை வைத்ததால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோனதாக பீல்டைத் தடுத்த வகையில் ‘அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட்’ என்று அவுட் கொடுக்கப்பட்டார்.

இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணியில் ஷேய் ஹோப் தனது 10வது ஒருநாள் சதத்தை எடுக்க இலக்கை எளிதாக எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.

ஷேய் ஹோப் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் விளாசி சதமெடுத்த பிறகு இலக்குக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார், பிறகு 3 ஓவர்களை மீதம் வைத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றியைச் சாதித்தது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 105/0 என்று வலுவாக இருந்தது. தனுஷ்கா குணதிலகா 55 ரன்களையும் திமுத் கருண ரத்னே 52 ரன்களையும் எடுத்தனர்.

கருணரத்னே வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரன் பொலார்டிடம் (1/15) ஆட்டமிழந்தார். பொலார்டின் அடுத்த ஓவரில் குணதிலகா பந்தை மிதித்து விட்ட சர்ச்சை எழுந்தது. பொலார்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை குணதிலகா தடுத்தாடினார், நிஷாங்கா ஒரு சிங்கிள் ஓடலாம் என்று எத்தனித்தார், குணதிலகாவும் சில அடிகள் ஓடி விட்டு அவரை வேண்டாம் என்றார். அப்படி திரும்பி வரும்போது பந்தின் மீது காலை வைத்து விட்டார், தெரியாமல்தான் செய்தார் ஆனால் அது தவறு என்று களநடுவரிடம் பொலார்ட் முறையிட்டார். ஆனால் ரீப்ளேயில் குணதிலகா வேண்டுமென்றே தன் ரன் அவுட்டை தடுப்பதற்காக பந்தை மிதித்தார் என்று தெரியவர நடுவர் கையை உயர்த்தினார்.

அதன் பிறகு இலங்கை இன்னிங்ஸ் திசைமாறியது. மேத்யூஸ் (5), நிசாங்கா (8), அடுத்தடுத்து வெளியேற அஷன் பந்தாரா 50 ரன்கள் எடுத்தது இலங்கையை 232 ரன்களுக்கு கொண்டு சென்றது. சந்திமால் 12, சண்டகன் 16 நாட் அவுட் மட்டுமே மற்ற இரட்டை இலக்கம் எட்டிய வீரர்கள்.

232 என்ற ஸ்கோர் நிச்சயம் போதாது. எவின் லூயிஸ் (65) ஹோப் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143/0 என்று அதிரடி தொடக்கம் கண்டனர். ஷேய் ஹோப் 110 ரன்கள் எடுத்து சமீராவிடம் ஆட்டமிழந்தார், விழுந்த 2 விக்கெட்டுகளுமே சமீராவுக்க்குத்தான். டேரன் பிராவோ 37 நாட் அவுட், ஜேசன் மொகமட் 13 நாட் அவுட் என்று வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக ஷேய் ஹோப் தேர்வு செய்யப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே