ஒருநாள் போட்டியில் அரிதான அவுட்: ரன்அவுட் ஆகவிடாமல் தடுத்த இலங்கை பேட்ஸ்மேனுக்கு அவுட் அளித்த நடுவர்:

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரன் அவுட் செய்ய முயன்றதை தடுத்ததால் இலங்கை பேட்ஸ்மேனுக்கு ,(அப்ஸ்ட்ரக்டிங் தி பீல்ட்) நடுவர் அவுட் வழங்கினார். ஒரு நாள் போட்டிகளில் மிகவும் அரிதான அவுட்டாகவே இது பார்க்கப்படுகிறது
ஆன்டிகுவாவில் இலங்கை, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 18 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.

மே.இ.தீவுகள் தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கி அற்புதமான சதம் அடித்த ஷாய் ஹோப்(110, ஒருசிக்ஸர்,12பவுண்டரி) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஹோப் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.. ஹோப் அடித்த சதம் ஒருநாள் போட்டியில் அவருக்கு 10-வது சதமாக அமைந்தது.

233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப், இவான் லூயிஸ் இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்தனர். லூயிஸ் 75 பந்துகளிலும், ஹோப் 47 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

இருவரையும் பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் பலரும் முயன்றும் நடக்கவில்லை. 29 ஓவர்கள்வரை தொடக்க வீரர்கள் சேர்ந்து விளையாடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினர்.

லூயிஸ் 90 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து சமீரா பந்துவீச்சில் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த டேரன் பிராவோ, ஹோப்புடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணி வெற்றிக்கு நகர்த்தினர். பொறுமையாக ஆடிய ஹோப் 125 பந்துகளில் சதம் அடித்து 110 ரன்களில் சமீரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஜேஸன் முகமது, பிராவோவுடன் சேர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பிராவோ 37 ரன்களிலும், முகமது 17 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்து மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கருணாரத்னே, குணதிலகா இருவரும் அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆட்டத்தின் 22-வது ஓவரில்தான் எதிர்பாராத சம்பவம் நடந்தது.

22-வது ஓவரை பொலார்ட் வீசினார் குணதிலகா எதிர்கொண்டார்.முதல் பந்தை பொலார்ட் பவுன்ஸராக வீச அதை தடுத்து ஆடி வேகமாக ரன் ஓட குணதிலகா முயன்றார்.

ஆனால், பொலார்ட் ஓடிவரவே பின்வாங்கி கீரீஸ் பகுதிக்கு குணதிலகா திரும்பிச் சென்றார். அப்போது குணதிலகா கால்களுக்கு இடையே சிக்கிய பந்தை அவர் தட்டிவிட்டார். குணதிலகா ஓடும்போது அவரையும் அறியாமல் பந்து காலில் பட்டு ஓடியது.

ரன்அவுட் செய்யும் வாய்ப்பையும், பீல்டிங் செய்யவிடாமல் தடுத்துவிட்டார் எனக் கூறி அவுட் அளிக்க பொலார்ட் நடுவரிடம் அப்பீல் செய்தார். களநடுவர் மூன்றாவது நடுவருக்கு பரிந்துரைத்தார். மூன்றாவது நடுவர், அம்பயர்ஸ் கால் அளிக்கவே, நடுவர் குணதிலகாவுக்கு அவுட் வழங்கினார்.

“அப்ஸ்ட்ரக்டிங் தி பீல்ட்” முறையில் இலங்கை வீரர் குணதிலகா 55 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடக்க வீரர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டனர். இலங்கை அணியின் நடுவரிசை, பின்வரிசை பேட்ஸ்மேன் மடமடவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கருணாரத்னே 52 ரன்னில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஷன் பந்த்ரா 50 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

மற்ற வீரர்களான நிசாங்கா(8), மேத்யூஸ்(5), சந்திமால்(12), மென்டிஸ்(9) என சொற்ப ரன்களி்ல் ஆட்டமிழந்தனர். 49 ஓவர்களில் 232 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் ஜேஸன் ஹோல்டர், ஹேஸன் முகமது தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே