கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13 வது ஐபிஎல் தொடரில் விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த 13 ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்தும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
இதனிடையே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டித்தொடரை இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செபடம்பர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 10 தேதி வரை 53 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் போட்டிகள் அபுதாபி சார்ஜா மற்றும் துபாயில் உள்ள மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து அணி வீரர்களும் போட்டிக்கான பயிற்சியை தொடங்கியுள்ளதோடு ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான அனுமதியை பெற்றதை தொடர்ந்து முதல் அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் துபாய் சென்றது.
இது தொடர்பான புகைப்படங்களை அந்த அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரகளும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வரும் 21 ஆம் தேதி துபாய் புறப்பட்டுச் செல்வார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.