ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் திடீர் விலகல்; நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் 14-வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்ததையடுத்து அவருக்குப் மாற்றாக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை விலைக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

2020ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் அறிமுகமாகிய ஜோஸ் பிலிப், 5 போட்டிகளில் 78 ரன்கள் சேர்த்தார். இப்போது பிலிப்புக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாவிட்டாலும், 12 முதல்தரப்போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்களை விளாசியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப் ரூ.20 லட்சத்துக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டிருந்தார். அதே விலைக்கு ஃபின் ஆலன் வாங்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிவிப்பில், “ ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப்பால் 14-வது ஐபிஎல் சீசன் முழுமையாக விளையாட முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் தனது முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் மோதுகிறது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு கிளென் மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், கெயில் ஜேமிஸன் ஆகியோர் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சி்பி அணியால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.

ஆனால், இந்த முறை புதிய வீரர்கள், சிறந்த ஆல்ரவுண்டர்களை வாங்கியிருப்பதால், முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்சிபி கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே