BREAKING : பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் சிறிய, சிறிய குறைபாடுகளால், வாக்குப்பதிவு தாமதமும், இடர்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் உள்ள 5 மற்றும் 6வது வார்டுகளில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட சின்னங்களில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது. இது வாக்களர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிலவியது. அதோடு, வாக்குப்பதிவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதேபோல திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட 3 மற்றும் 4-வது வார்டுகளில் வாக்குச் சிட்டுகளை அதிகாரிகள் தவறான முறையில் மடித்ததாகக் கூறி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரம் கால தாமதத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டிக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே கொண்டு வந்து தீ வைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குப்பெட்டிகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், வாக்குப்பதிவு மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

1,200 வாக்குகளை கொண்ட வாக்கு மையத்தில், 500 வாக்குகள் பதிவான நிலையில், வாக்குப் பெட்டிகள் எரிக்கப்பட்டதால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா?? என கேள்வி எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே