நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சிதம்பரம் தொகுதி எம்.பி.திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், தமிழர்களையும், தமிழர்களின் அடையாளங்களையும் அழிக்க முயற்சி பாஜக கட்சி மறைமுகமாக செயல்படுகிறது எனவும் கூறினார்.
மேலும் பாஜகவிற்கு, அதிமுக துணை போவதாகும் குற்றம்சாட்டினார்.
விக்ரவாண்டி தொகுதி, அதிமுக வேட்பாளர் முத்தரசை ஆதரித்து பிரச்சாரம் செய்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், இடைத்தேர்தல் முடிவுகள் வரலாற்று சாதனை படைக்கும் என்றும் பேசினார்.
இதேபோல் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தன்னை குற்றவாளி எனக் கூறும் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கமாக கொண்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், கருத்து தெரிவிக்கும் போது என்ன பதில் வரும் என்பதை பார்த்து பேச வேண்டும் எனவும் கூறினார்.
இதனிடையே பாஜக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த சுவாமிநாதன், காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்து இருப்பதாகவும், விரைவில் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.