ஹோம்மேட் சாக்லேட்டில் கலப்படம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு

உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்டில் கலப்படம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலப்படத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஹோம்மேட் சாக்லேட் தொழில் அழியும் அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உதகைக்கு சுற்றுலா செல்பவர்கள் மறக்காமல் வாங்குவது இரண்டு பொருட்கள், ஒன்று ஊட்டி வர்க்கி மற்றொன்று சாக்லேட். அதுவும் ஹோம் மேட் சாக்லேட் என்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு கொள்ளை பிரியம்.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கொட்டைகளை அரைத்து அத்துடன் கொக்கோ பவுடர், சர்க்கரை சேர்த்து டார்க், மில்க், ஒயிட் என மூன்று ரகங்களில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்டுகள், குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு மிகக் குறைந்த விலையில் சாக்லேட் யார் விற்பது என்ற தொழில் போட்டி காரணமாக கலப்படம் நிறைந்த ஹோம்மேட் சாக்லேட்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாவர எண்ணையும், தரம் குறைந்த சாக்லேட் பவுடரும் கலப்பதாக விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தரமான ஹோம்மேட் சாக்லெட்டுகள் கிலோ 200 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் குறைந்த விலைக்காக அதிகரித்து வரும் கலப்பட சாக்லெட்டுகளை கட்டுப்படுத்தாவிட்டால், தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஹோம்மேட் சாக்லெட் வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காமல், அதனை சுவைத்தும் வாசனையை நுகர்ந்தும் வாங்கினாலே கலப்படத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என அறிவுறுத்துகின்றனர் விற்பனையாளர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே