விவசாயி இறப்பு விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை நிதியை வாங்கமாட்டோம் – விவசாயி மகள் ஆவேசம்

எனது தந்தை மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அதுவரை அரசு நிதியை ஏற்க மாட்டோம் என தென்காசி விவசாயியின் மகள் தெரிவித்தார்.

விவசாயி அணைக்கரை முத்து உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அணைக்கரை முத்துவின் குடும்பத்தினரிடம் பேசி, சமாதானப்படுத்த முயன்றனர். 

இருப்பினும் அவரது குடும்பத்தினர் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘எனது தந்தை மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

எனது தந்தை உடலை காட்டினர். உடலில் 18 இடங்களில் காயங்கள் உள்ளன.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் நீதித்துறை நடுவர் தனித்தனியாக அழைத்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்காக எங்களிடம் கையெழுத்து வாங்கவில்லை. எப்போது பிரேதப் பரிசோதனை செய்தார்கள் என்பது தெரியாது.

எங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் பிரேதப் பரிசோதனை செய்தது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவை எங்களிடம் காட்டவில்லை.

எங்களுக்கு நீதி வேண்டும். எந்த நீதியும் வழங்காமல் அரசு வழங்கும் உதவி எதற்கு?.

இது போன்ற நிலை எந்த குடும்பத்துக்கும் ஏற்படாத வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அரசு அதிகாரிகளுக்கு சாதகமாக அரசு உள்ளது. பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?. நிதி வழங்கினால் மட்டும் போதுமா?. நீதி வழங்க வேண்டாமா?. நீதி கிடைக்கும் வரை எங்கள் தந்தை உடலை வாங்க மாட்டோம்.

கொலை வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே எங்கள் தந்தை உடலையும், அரசு வழங்கும் நிவாரண உதவியையும் பெறுவோம்’ என்றார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே