நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம் – திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் மடல்

நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாளை திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது.

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞரின் புகழ்போற்றும் நினைவேந்தல் மடல்.

எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது.

காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து – அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து – நம் உதிரத்திலிருந்து – உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்திருக்கிறார்.

கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற உடன்பிறப்புகளும் அவர்களில் உண்டு.

தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

நம் உயிர் நிகர் தலைவரின் திட்டங்களால் ஒவ்வொரு இல்லத்திலும் விளைந்த பயன்களை நன்றியுள்ள உள்ளங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்கத் தவறுவதில்லை, என கூறியுள்ளார்.

மேலும், நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் – திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம்.

தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம்.

அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்!, என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே