அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றை ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் நீக்கம்

கரோனா வைரஸ் குறித்து தவறான தகவலைப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதிவை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்ப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா ஆரம்பம் முதலே கரோனா பாதிப்பை கையாள்வதில் தவித்து வருகிறது.

உலகின் முன்னணி நாடாக உள்ள அமெரிக்காவில் தற்போது 48 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனாவை எதிர்கொள்வதில் அலட்சியம் காட்டி வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா குறித்த தவறான தகவலைப் பதிந்ததாக அதிபர் ட்ரம்பின் பதிவை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், “​​குழந்தைகள் கரோனாவிற்கு இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்.

எனவே பள்ளிகளைத் திறப்பதால் அவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகமாட்டார்கள் ” என்று தெரிவித்திருந்தார்.

அதனை தனது முகநூலிலும் பகிர்ந்திருந்தார்.

சில குழந்தைகள் கரோனாவால் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறக்கவும் செய்திருந்த நிலையில் ட்ரம்பின் கருத்து குறித்து மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் ஆதாரமில்லாத செய்தியைப் பகிர்ந்ததாக அவரின் பதிவை முகநூல் நிறுவனம் நீக்கியது.

தவறான தகவல்கள், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் தொடர்பான உள்ளடக்க விதிகளை மீறுவது தொடர்பாக அதிபர் ட்ரம்பிற்கு எதிராக சமூக ஊடகதளங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பேசிய டிரம்ப் பிரச்சாரத்திற்கான பத்திரிகை செயலாளர் கோர்ட்னி பரேல்லா, “சமூக ஊடக நிறுவனங்கள் சத்தியத்தின் நடுவர்கள் அல்ல.” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிரூபிக்கப்படாத சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட காணொலியை ஜூலை மாதம் முகநூல் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதாரமில்லாத தகவல்களைப் பகிர்வதும் அதனை சமூக ஊடகங்கள் நீக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே