சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டில் யூடியூபர் மாரிதாஸ் மதுரை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் வசித்து வருகிறார். இவர் தி.மு.க, பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் ஊடகங்களை விமர்சித்து கடுமையான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகிறார். இவர் வெளியிட்ட வீடியோக்களும், கருத்துகளும் அரசியால் அரங்கில் பலமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இந்த நிலையில், நாட்டின் முப்படைத் தளபதி நேற்றைய தினம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சூழலில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கை அவதூறு செய்யும் வகையிலும், காஷ்மீருடன் ஒப்பிட்டு மாரிதாஸ் பதிவிட்டிருக்கும் ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மாரிதாஸின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மதுரையைச் சேர்ந்த தி.மு.க வழக்கறிஞர் ராமசுப்ரமணியன், ‘தமிழக அரசு மீது அவதூறு பரப்பி பதற்றத்தை உருவாக்க நினைக்கும் மாரிதாஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள்’ என்று மதுரை கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையிலும், வேறு சில அவதூறு கருத்துகளை பதிவிட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று மதியம் மதுரை அழகர் கோயில் சாலையிலிருக்கும் மாரிதாஸ் வீட்டுக்கு மாநகர காவல்துறை உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்ய சென்றனர். இந்த தகவல் தெரிந்து பா.ஜ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் மாரிதாஸ் வீட்டின் முன் கூடி கைது செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.காவல்துறையினருடன் பா.ஜ.க நிர்வாகிகள் வாக்குவாதம்
அதன் பின்பு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாரிதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து சென்றனர்.