காங்கிரஸும் பாஜகவும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள்: சீமான்

காங்கிரஸும் பாஜகவும் இரு வேறு கட்சிகள்தான். ஆனால், ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கையில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் கூறும்போது, “கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கில், கச்சத்தீவைக் கொடுத்தது கொடுத்ததுதான். அதனைத் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கூறியது. அடுத்து பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. திரும்பவும் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு வழக்குப் போட்டது. பாஜகவும் அதைத்தான் கூறியது.

பாஜகவும் காங்கிரஸும் ஒரே கொள்கையைக் கொண்ட கட்சிகள். விவசாயிகள் கடனாளி ஆகக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் தயவுசெய்து எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே