இந்தப் பிட்சில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை: விராட் கோலி ஒப்புதல்..

அன்று ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடியது போல் நேற்று ஆர்ச்சர் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி அனைவரையும் திடுக்கிட வைத்தார், பந்து சிக்ஸ். பிறகு காலில் போடப்பட்ட பந்தை ஸ்கொயர்லெக்கில் சுழற்றி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் வேகம் அவரை முடக்கியது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து பந்தாடியது. 124 ரன்களுக்கு இந்தியாவை மட்டுப்படுத்தி பிறகு 130/2 என்று ஊதியது, இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

148-150 கிமீ வேக மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டானுக்கு எதிராக என்ன செய்வதென்று தெரியாமல் இந்திய அணி பவர் ப்ளேயில் 20/3 என்று ஆனது. ரிஷப் பந்த் சில நிமிடங்கள் ஒளிக்கீற்றை காட்டினார். அன்று ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடியது போல் நேற்று ஆர்ச்சர் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி அனைவரையும் திடுக்கிட வைத்தார், பந்து சிக்ஸ். பிறகு காலில் போடப்பட்ட பந்தை ஸ்கொயர்லெக்கில் சுழற்றி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் வேகம் அவரை முடக்கியது.

அகமதாபாத் பிட்ச் மந்தமான பிட்ச், ஆனால் இவர்கள் வீசிய வேகம் இந்திய அணியை திக்கு முக்காடச் செய்தது. இதனையடுத்து பட்டையைக் கிளப்புவோம், ஆக்ரோஷ அதிரடிதான் இனிமேல் என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாக முடிந்தே போனது. அய்யர் மட்டுமே உத்தி ரீதியாக இங்கு சரியாக ஆடினார்.

விராட் கோலி தன் பாணியில் ஆடுவதை விடுத்து ரிஷப் பந்த் போல் ஆடவேண்டும் என்று நினைத்து பரிதவித்தது அவர் ஆர்ச்சரை ஒதுங்கிக் கொண்டு அடிக்க நினைத்த போதே தெரிந்தது, ஆனால் ஆதில் ரஷீத்திடம் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார், ஒதுங்கிக் கொண்டு அசிங்கமாக ஆடி மிட் ஆஃபில் கேட்ச் ஆனார். ஷிகர் தவானெல்லாம் முடிந்து விட்டார். அவ்வளவுதான், பிரிதிவி ஷாவையோ, இஷான் கிஷணையோ, சூரிய குமார் யாதவையோ கொண்டு வர வேண்டியதுதான்.

பவுலிங்கில் சாஹலை ஜேசன் ராயுடன் மோதவிட்டு கோலி தன் கேப்டன்சி போதாமையை வெளிப்படுத்தினார். 13 பந்துகளில் சாஹலை மட்டும் 26 ரன்கள் விளாசினார் ராய். வாஷிங்டன் சுந்தர் தான் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக பவர் ப்ளேயில் வீசக்கூடியவர் அவரை 12வது ஓவரில் கொண்டு வந்தார், அப்போது ஆட்டம் ஏறக்குறைய இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்து விட்டது. இப்படி இருக்கிறது விராட் கோலியின் கேப்டன்சி.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு அவர் ஒப்புக் கொண்டதாவது: “இந்தப் பிட்சில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஷாட்களை ஆடியதில் சரியாக அதை செயல்படுத்தவில்லை.

தவறை ஒப்புக் கொள்வோம், பிறகு மீண்டும் தீவிரமாக வருவோம். எந்த பகுதிகளில் அடிக்க வேண்டும் என்பதை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். பிட்ச் நம் இஷ்டத்துக்கு ஆடுவதை தடுத்தது (பிட்சாம், இங்கிலாந்தின் வேகம் என்பதுதான் உண்மை).

பிட்ச் அனுமதித்தால் மட்டுமே நாம் முதல் பந்திலிருந்து ஆக்ரோஷம் காட்ட முடியும். பிட்சை சரியாக மதிப்பிடவில்லை, ஷ்ரேயச் அய்யர் செய்தார், ஆனால் 150-160 ரன்கள் எடுக்க முடியாமல் வரிசையாக ஆட்டமிழந்தோம். சில நாட்களில் இப்படியாகும் சில நாட்களில் நாம் நினைத்ததெல்லாம் கைகூடும். இதெல்லாம் ஆட்டத்தின் அங்கம்.

இந்த இங்கிலாந்துக்கு எதிராக நாம் எதையும் சாமானியமாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றார் கோலி.

தான் தோற்றால் பிட்ச். இங்கிலாந்து தோற்றால் அது தங்கள் திறமை, வடிவேலு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது, தனக்கு வந்தா ரத்தம் எதிராளிக்கு வந்தால் தக்காளி சட்னி!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே