கேப்டனாக 14வது ‘டக்’- கங்குலி, தோனியைக் கடந்து கோலி விரும்பத் தகாத மைல்கல்.

சுதந்திர கிரிக்கெட்டை வெளிப்படுத்தி உலகக்கோப்பைக்கு தயார் செய்து கொள்வோம் என்றார், கடைசியில் நேராக 150 கிமீ வேகம், லெந்த் பந்து வீசினால் அதே பழைய பலவீனம் வெளிப்பட்டு விட்டது.

அகமதாபாதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆனார். இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத்திடம் டக் அவுட் ஆனார்.

இதன் மூலம் கேப்டனாக 14வது டக்கை அடித்து அவரது புகழுக்கும், ஆட்டத்துக்கும் களங்கம் விளைக்கும் வகையில் இன்னொரு பூஜ்ஜியத்தை எடுத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 டக்குகளை அடித்து கங்குலியுடன் இணைந்தார்.

அதே போல் இன்னொரு விரும்பத்தகாத சாதனையில் இந்திய கேப்டனாக அதிக டக்குகளை அடித்து கங்குலியைக் கடந்து விட்டார் கோலி. அனைத்து வடிவங்களிலும் 14 டக்குகளை அடித்து கேப்டனாக கங்குலியின் 13 டக் அவுட் சாதனையைக் கடந்தார்.

இன்னொரு இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி கேப்டனாக, 11 டக்குகளை எடுத்துள்ளார். கபில்தேவ் தன் கரியரில் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார். முகமது அசாருதீன் தன் கரியரில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

ஏற்கெனவே அகமதாபாத் டெஸ்ட்டில் டக் அவுட் ஆனார் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.  இப்போது நேற்று ஆதில் ரஷீத் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்கிறேன் பேர்வழி என்று மிட் ஆஃபில் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். இது அவரது 14 டக் ஆகும்.

ஏற்கெனவே டெஸ்ட் தொடரில் விராட் கோலியை இங்கிலாந்து பவுலர்கள் ஒன்றுமில்லாமல் அடித்து விட்டனர், இவர் போட்ட பிட்ச், கேட்ட பிட்ச் இவருக்கு எதிராகவே சென்றது. ஒன்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் தன் பேட்டிங்கை கருத்தில் கொண்டு பிட்ச் போடுகிறார் கோலி என்ற புகாரிலிருந்து வேண்டுமானால் கோலி தப்பலாம்.

100, 100 ஆக அடித்துக் கொண்டிருந்த ரன் மெஷின் விராட் கோலி தற்போது 100-லிருந்து 1 என்ற இலக்கத்தை அகற்றி விட்டார்.

சுதந்திர கிரிக்கெட்டை வெளிப்படுத்தி உலகக்கோப்பைக்கு தயார் செய்து கொள்வோம் என்றார், கடைசியில் நேராக 150 கிமீ வேகம், லெந்த் பந்து வீசினால் அதே பழைய பலவீனம் வெளிப்பட்டு விட்டது.

124/7 என்று ஷ்ரேயஸ் அய்யரினால் தட்டுத்தடுமாறி எட்டிய இந்திய அணி பிறகு பவுலிங்கையும் சரியாக செய்ய முடியாமல் போகவே இங்கிலாந்து 130/2 என்று தொழில்நேர்த்தியுடன் வெற்றி கண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வெற்றி தோல்வி வீரர்களுக்கு சகஜம் என்றாலும் சில பல பிரச்னைகளிலிருந்து இந்திய வீரர்கள் விடுபட முடியாமல் இருப்பதுதான் புதிய சிக்கல்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே