இந்தியில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

இந்தியில் மாதவன் நடித்து வரும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் மஞ்சு வாரியர்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தற்போது மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள ‘தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘மாராக்கர்’, ‘ஜாக் அண்ட் ஜில்’, ‘காயட்டம்’, ‘9 எம்.எம்’ உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மஞ்சு வாரியர்.

மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பலரும் அவருடைய எதார்த்தமான நடிப்பைப் பாராட்டி இருந்தார்கள். தற்போது இந்தி திரையுலகிலும் அறிமுகமாகிறார் மஞ்சு வாரியர்.

மாதவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அமெரிகி பண்டிட்’. புதுமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே