விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் சந்தித்தார்.
தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசின் சட்டத்துக்குள்பட்டு சமூக இடைவெளியுடன் கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை வைத்தோம்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிப்பதாக முதல்வர் கூறினார்.
முதல்வருடனான சந்திப்பு திருப்தியளிக்கும் வகையில் இருந்தது. விநாயகர் சதுர்த்தி விழா பற்றி மட்டுமே இந்த சந்திப்பில் பேசப்பட்டது.” என்றார் முருகன்.
முன்னதாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலை நிறுவக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.